கும்பகோணம்: 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண்வணிகத் துறை ஆணையர் ஆபிரகாம், வேளாண்மைத் துறை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன், சக்கரைத்துறை இயக்குநர் அன்பழகன், வேளாண்மைப்பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர்.
எம்.பி.க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், வை.செல்வராஜ், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், பிரபாகரன், பன்னீர்செல்வம், ராஜகுமார், கும்பகோணம் மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,440 வழங்கப்படுகிறது. தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள் உற்பத்திக்கு இடுபொருள் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும்.
உழவர்கள் உயிர் காப்பீடு திட்டம்: வேளாண் பணியின்போது விவசாயிகள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றுத்திறனாளியானால் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கும் வகையில் முதல்வரின் உழவர்கள் உயிர் காப்பீடு திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக விவசாயிகளிடமிருந்து ரூ.50 பிரீமியமாக வசூலித்துக் கொள்ளலாம். 58 வயது நிறைவடைந்த ஆண், பெண் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும்.
பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் தென்னை வளர்ச்சி வாரிய கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். காவிரி, கொள்ளிடம் பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டும். ஆறுகளில் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது.
தஞ்சையில் வேளாண் அறிவியல் நிலையம்: கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் அளவை ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தி, வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும். 2025-26-ம் ஆண்டுக்கான குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். தஞ்சாவூரில் வேளாண் அறிவியல் நிலையமும், பேராவூரணியில் இயற்கை ஒட்டுண்ணி உற்பத்தி மையமும் அமைக்க வேண்டும். தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்க கரைக் காவலர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
4 ஆண்டுகளில் ரூ.5,643 கோடி நிதி: அதன்பின், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: கடந்த 4 ஆண்டுகளில் இந்தக் கூட்டத்துடன் 24 கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 1,860 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களிடமிருந்து 1,267 கோரிக்கைகள் வரப்பெற்றன. இதில், 719 கோரிக்கைகள் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
4 ஆண்டுகளில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,242 கோடி, வறட்சி நிவாரணமாக 14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.126 கோடி, குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.275 கோடி என 56 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,643 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகள் கூறிய கருத்துகளை தமிழக முதல்வரிடம் கூறி நிதிக்கேற்ப ஒவ்வொரு திட்டமாக அமல்படுத்துவோம். கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு விடும் மத்திய அரசின் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதலாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார். நிறைவாக, வேளாண்மை இணை இயக்குநர் வித்யா நன்றி கூறினார்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்:
* குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,100, கரும்புக்கு ரூ.4,400 வழங்க வேண்டும்.
* விவசாயிகள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்க உழவர்கள் உயிர் காப்பீடு திட்டம்.
* 58 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை.
* காவிரி, கொள்ளிடம் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிப்பது.
* கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடனை ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்துவது.
* கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்க கரைக் காவலர்களை நியமிப்பது.