தமிழகம்

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை முன் வைத்து ‘யார் அந்த சார்’ என்று எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக துப்பு துலக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்யும் வகையில் அவருக்கு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் 3 மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் போலீஸார், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT