திருப்பூர்: கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சுணக்கம் காட்டும் நிலையில், விசைத்தறியாளர்கள் சார்பில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்கவும், இனி ஒப்பந்த கூலியைக் குறைக்காமல் வழங்கும் வகையில் சட்டப் பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டியும், கடந்த ஓராண்டாக நீடித்துவரும் குறைக்கப்பட்ட மற்றும் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய கூலி உயர்வு கோரிக்கைகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசித் தீர்வுகாணும் பொருட்டு, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நல ஆணையமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து, விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கருப்புக்கொடி போராட்டம் தொடர்பாக, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுக்குச் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பூபதி கூறும்போது, “கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் இழுத்தடிப்பதையும், ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்ட கூலியைக் குறைத்து வழங்கி வருவதையும் கண்டித்து அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அவிநாசி, தெக்கலூர், சோமனூர், புதுப்பாளையம், காரணம் பேட்டை எனக் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1.25 லட்சம் விசைத்தறி இயந்திரங்கள் கொண்ட, 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் முன்பு கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடந்துள்ளது. ஏற்கெனவே பலர் இந்த தொழிலை விட்டு வெளியேறிய நிலையில், அரசும், மாவட்ட நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்த கட்டமாகச் சங்க முடிவின் படி, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.