தமிழகம்

சீமான் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: போலீஸார் நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு பதியப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வளசரவாக்கம் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் ரீதியாக சீமான் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின்பேரில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே சீமானுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸாரிடம் கடிதம் அளித்தார். மீண்டும் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால் விஜயலட்சுமி மீண்டும் போலீஸில் புகார் அளித்தார்.

ரத்து செய்யக்கோரி சீமான் மனு: இந்நிலையில் விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், இந்த வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

அப்போது சீமானுக்கு எதிரான வழக்கு ஆவணங்களைப் படித்துப் பார்த்த நீதிபதி கடந்த 2011-ம் ஆண்டு சீமானுக்கு எதிராக பதியப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீஸாருக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்.17-க்கு தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT