தமிழகம்

“என்ன விளையாட்டு இது..?” - ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: “நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதா, பல்வேறு சோதனைகளைத் தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியதுடன், அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார். தற்போது அதிமுகவுக்கு கிடைத்துள்ள இறையருள் பழனிசாமி. ஜெயலலிதா சந்தித்த சோதனைகளைப்போல அவரும் பல சோதனைகளை சந்தித்து, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கியுள்ளார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7.5 சகவீத இடஒதுக்கீடு, 2,000 அம்மா மினி கிளினிக், 6 புதிய மாவட்டங்கள், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு, முல்லை பெரியாறு தீர்ப்பை நடைமுறைப்படுத்தியது என பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை செயல்படுத்தியுள்ளார் பழனிசாமி. முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல, மக்கள் சேவைக்கான பதவி என்று புதிய இலக்கணத்தை படைத்தார்.

தற்போது எதிரிகள் மற்றும் துரோகிகள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்க முடியாது. இதனால் அதிமுகவுக்கு எந்த சேதாரமும் இல்லை. இது மக்களால் பாதுகாக்கப்படுகிற கட்சி” என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களே, நேற்று ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?” என்று அவர் பதிவிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT