சென்னை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து ‘பணக்கொழுப்பு’ என்று குறிப்பிட்டு சீமான் முன்வைத்த விமர்சனத்துக்கு, ‘திரள்நிதி’யை முன்வைத்து தவெக பதிலடி கொடுத்துள்ளது.
“நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்திருந்தார்.
சீமானின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களான லயோலா மணி மற்றும் சம்பத் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: “உழைத்து சம்பாதிப்பதற்கும், திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திரள் நிதியால் கொழுப்பை வளர்த்து கொண்டிருப்பவர்கள் எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
மைக்கில் எதையாவது உளறுவதையே சீமான் வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று கூறும் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் டெபாசிட் தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அவர், எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி” என்று கட்சியினரை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?
திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று. நாங்கள் சட்டப்பேரவையில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம். அவர் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம். அவர் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.