பெரியகுளம்: “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்.” என்று பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க முழுஉரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தோம். நீதிமன்றத்துக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் உள்ளது. இதனடிப்படையில் பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்.” என்று அவர் கூறினார்.