கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காகத் தோண்டிய குழியிலிருந்து 16 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவை முன்னாள் போராளிகளின் குடும்பத்தினரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். உள்நாட்டுப் போரின்போதும், போர் நிறைவடைந்த பின்னரும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல ஆகிய பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இலங்கையில் கண்டறியப்பட்டாலும், இவை தொடர்பாக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழி தோண்டியபோது சில மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து சாலை விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டு, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற உத்தரவின் பேரில் செப்டம்பர் மாதம் அகழ்வுப் பணிகள் தொடங்கின. தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் 3 ட அகழ்வுப் பணிகள் நடந்துள்ளன. அப்போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட 16 மனித எலும்புக்கூடுகளில் 3 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்பதை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் வந்த பின்னர்தான் கூற முடியும் என அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் உள்நாட்டுப் போரின்போது இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடைய குடும்பங்களாக இருக்கலாம் எனவும், இதுகுறித்து விரிவாக அகழாய்வு செய்து, விசாரணை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.