தமிழகம்

புயல் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை அரசுதான் சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புயல் பாதிப்புகளுக்கு நியாயமான, உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 63 பேர் இறந்தனர். 732 கால்நடைகள் பலியாகின. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56 ஆயிரத்து 942 குடிசை வீடுகளும், 30 ஆயிரத்து 322 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.

கஜா புயல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அப்போதே உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. ஒருவேளை வேறு ஏதேனும் காரணங்களுக்காக உரிய இழப்பீடு கிடைக்க பெறாதவர்கள் உரிய ஆதாரங்கள் மற்றும் காரணங்களுடன் அரசுக்கு மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புயல் பாதிப்புகளுக்கு நியாயமான, உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும், எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT