சென்னையில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் இருசக்கர வாகன பார்க்கிங் பகுதிகளில் இட நெருக்கடி பிரச்சினை நிலவுகிறது. காலை 9 மணிக்கு பிறகு, "ஹவுஸ்புல்" என்று பலகை வைக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.
எனவே, இதற்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர். விமானநிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தற்போது தினசரி 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இந்த வழித்தடங்களில் மொத்தம் 42 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், 41 ரயில் நிலையங்களில் இருசக்கர வாகன பார்க்கிங் வசதியும், 29 ரயில் நிலையங்களில் நான்கு சக்கர வாகன பார்க்கிங் வசதியும் உள்ளது. முதன்முதலில் கோயம்பேடு நிலையத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக பல்வேறு நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பல நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் 500 இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி இருக்கிறது. இந்த பார்க்கிங் பகுதி காலை 9 மணிக்குள் நிரம்பிவிடும். இதன்பிறகு, யாராவது வாகனத்தை எடுத்த பிறகே, மற்றவர்களுக்கு பார்க்கிங்கில் விட அனுமதிக்கப்படுகிறது. இதனால், பார்க்கிங் இடத்துக்காக ஒரு மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து திரிசூலத்தைச் சேர்ந்த கிருபாகரன் கூறுகையில், "நான் தினசரி விமானநிலைய மெட்ரோ ரயில் பார்க்கிங் பகுதியில் பைக்கை விட்டு, ஆயிரம்விளக்கு சென்று திரும்புவேன். காலை 9 மணிக்குபிறகு வந்தால் இருசக்கர வாகனங்களை விட இடம் கிடைக்காது. எனவே, முன்னதாகவே வந்து விடுவேன். இன்று தாமதமாக வந்ததால், அரைமணி நேரம் வரை காத்திருந்து, இருசக்கர வாகனத்தை பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு சென்றேன். இது தொடர்கதையாகி உள்ளது.
இங்கு கூடுதல் இடவசதியையும், கார் பார்க்கிங் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்" என்றார். இதுபோல, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 270 இருசக்கர வாகனங்களையும், அருகே மற்றொரு பகுதியில் 450 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த இடவசதி உள்ளது. இந்த இடங்கள் காலை 8 மணிக்குள் முழுமையாக நிரம்பிவிடுகின்றன. இதன்பிறகு வருபவர்களுக்கு வாகனத்தை நிறுத்த உடனடியாக இடம் கிடைக்காது.
இதுகுறித்து, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது: விமான நிலைய மெட்ரோ நிலையத்துக்கு வர போதிய நேரடி பொது பேருந்து வசதி இல்லாததால், பைக்குகளில் வந்து, பார்க்கிங்-ல் விட்டு செல்கின்றனர். ஆனால், இங்கு இடநெருக்கடி ஏற்படுகிறது.
இதுபோல, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதியும் விரைவாக நிரம்பிவிடுகிறது. இதனால், தினசரி மெட்ரோ ரயிலை நம்பி வரும் தென் சென்னை பயணிகள் பெரும் மனச் சோர்வுடன் பார்க்கிங் வசதியை தேடி செல்லும் அவலநிலை இருக்கிறது. அலுவலகம் செல்லும் பயணிகளுக்கு பெரும் கஷ்டமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
ஆலந்தூர் மெட்ரோ பார்க்கிங்: விம்கோநகர் - விமானநிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக்கொள்ளும் வசதி இருப்பதால், இந்த நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதியில் (இடது பக்கம்) 1,300 இருசக்கர வாகனங்கள், 190 கார்களை நிறுத்தும் வசதி இருக்கிறது.
இந்த பார்க்கிங் பகுதி முழுமையாக நிரம்பிவிடுவதால், கூடுதலாக 300 டுவீலர்களை நிறுத்தும் விதமாக, புதிய வாகன நிறுத்தம், இந்த நிலையத்தின் வலது பக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திறக்கப்பட்டது. இந்த பார்க்கிங்கில் காலை 9 மணிக்கே ஹவுஸ்புல் பலகை வைத்து, மறுபுறத்தில் உள்ள பார்க்கிங் பகுதிக்கு பயணிகள் திருப்பிவிடப்படுகின்றனர். இதுதவிர, கார் நிறுத்த பகுதி காலை 11 மணிக்குள் நிரம்பிவிடுகிறது.
ஏஜி டி.எம்.எஸ் மெட்ரோ பார்க்கிங் பகுதியில் 120 இருசக்கர வாகனங்களை மட்டுமே நிறுத்தமுடிகிறது. போதிய இடவசதி இல்லாததால், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஐடி ஊழியர் பூபதிராஜா கூறுகையில், “ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் வசதி கிடையாது. இருசக்கர வாகன பார்க்கிங் காலை 11 மணிக்குள் ஹவுஸ்-புல் ஆகி விடுகிறது. இதனால் அதற்கு மேல் வாகனங்களை கொண்டு வருபவர்கள் இடமின்றி தவிக்கின்றனர்.
பார்க்கிங் வசதியை விரிவுபடுத்தி கொடுக்க மெட்ரோ நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார். இதுதவிர, பரங்கிமலை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, விம்கோநகர் உள்ளிட்ட நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் இட நெருக்கடி காணப்படுகிறது. விம்கோ நகர் பணிமனை மெட்ரோ பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்த போதிய இடமில்லை.
இதுபோல, திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடுதல் இடமில்லாததால், அருகில் உள்ள காலடிபேட்டை, திருவொற்றியூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் செல்கிறார்கள். அங்கும் காலை நேரத்தில் பார்க்கிங் நிரம்பிவிடுவதால், பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, இரா.பூபாலன் கூறுகையில், "திருவொற்றியூர் தேரடி பார்க்கிங் பகுதி மிகவும் சிறியதாக இருப்பதால், விரைவில் நிரம்பி விடுகிறது. இதுபோல, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, விம்கோநகர் உட்பட பல நிலையங்களில் ஒரு பக்கத்தில் மட்டுமே பார்க்கிங் வசதி இருக்கிறது.
இதனால், பயணிகள் வாகன நிறுத்துமிடம் தெரியாமல் அலைந்துதிரியும் நிலை உள்ளது. சிலர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், வாகனத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, இருபக்கத்திலும் வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், குறுகிய பார்க்கிங் உள்ள பகுதிகளை விரிவுப்படுத்த வேண்டும். கார் பார்க்கிங் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்" என்றார். சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்த வசதி இருந்தாலும், போதிய மேற்கூரை வசதி இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கே.கே.நகரை சேர்ந்த பியோராஜ் என்பவர் கூறுகையில், "திறந்தவெளியில் வாகனம் நிறுத்தப்படுவதால் வெயிலில் காய்கிறது. மழையில் நனைந்து பழுது ஏற்படுகிறது. எனவே, பார்க்கிங் பகுதிகளில் மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும், மாதாந்திர பாஸ் வழங்க வேண்டும்" என்றார்.
தினசரி 35 ஆயிரம் இருசக்கர வாகனங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் தினசரி 35,000 இரு சக்கரவாகனங்கள், 1,800 கார்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதால், இதற்கு ஏற்ப, வாகன நிறுத்த பகுதியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி கூறியதாவது: புறநகர்களில் இருந்து நகருக்குள் இருசக்கர வாகனம், கார்களில் வருவதை குறைப்பதே எங்கள் நோக்கம். இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மேம்படுத்தி வருகிறோம். வாகன நிறுத்தங்களில் இடநெருக்கடி உள்ள இடங்களை ஆய்வு செய்து, இதற்கான தீர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி, விமானநிலைய பார்க்கிங் இட நெருக்கடியை போக்க, அதன் அருகே 2 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வாங்கி மேம்படுத்தி உள்ளோம்.
ஏற்கெனவே நங்கநல்லூர், ஆலந்தூர், அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம், பச்சையப்பன் கல்லூரி, ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே இடங்களை வாங்கி, பார்க்கிங் வசதியை விரிவுபடுத்தி உள்ளோம். இதுபோல, பார்க்கிங் தேவை அதி
கமாக உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே இடங்களை வாங்க முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாதாந்திர பாஸ் நிறுத்தம்: தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவது பிப்.1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகன நிறுத்த இடங்கள் பயன்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், தினசரி வாகனத்தை நிறுத்தி செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பன்னடுக்கு பார்க்கிங் சாத்தியமில்லை 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே கூடுதல் இடங்கள் வாங்கப்பட்டு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் தெரிவிக்கின்றனர். எனினும், அதிக இடம் தேவை மற்றும் அதிகமான பராமரிப்பு செலவு ஆகியவை காரணமாக அதற்கு வாய்ப்பில்லை என மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மேம்படுத்துவது கட்டாய தேவையாக இருக்கிறது.
- மு.வேல்சங்கர், எம்.மகாராஜன்