சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் 24 மணிநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிப்.25-ம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, அகவிலைப்படியை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்துடன், 64 துறை சங்கங்கள் இணைந்து பங்கேற்றன. அந்தந்த மாவட்டங்களின் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் தலைமை வகித்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டத்துக்கு சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர்கள் வை.சிவக்குமார், ஆ.கோபிநாதன் தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் சா.டானியல் ஜெய்சிங் முன்னிலை வகித்தார்.
போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் த.முத்துக்குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றித் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு.
ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர் அதை மறந்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு இதற்காக ஒரு குழுவை அமைப்பது என்பது அரசு ஊழியர்களின் முதுகில் குத்தும் செயலாகும். சாமானிய மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கிவிட்டு, அவர்களை ஏமாற்றி செல்வது போல அரசு ஊழியர்களிடமும் நடந்துகொள்ள முடியாது என அரசுக்கு எச்சரிக்கிறோம்.
நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இதுகுறித்து அரசு கொள்கை நிலைப்பாடு எடுக்கப்படாத பட்சத்தில் வரும் பிப்.25 மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்தும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், மார்ச் 19-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாலுகா அலுவலகம் முன்பும் அரசு ஊழியர்களின் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. இதர மாவட்டங்களிலும் சங்கத்தின் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் 24 மணி நேர தர்ணா போராட்டங்கள் நடந்தன.