சென்னை: பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழகத்தின் மரபு, விவசாயம், கால்நடைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இளம்தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில், பொங்கலை முன்னிட்டு செய்தித்துறையின் ஊடக மையம் சார்பில் ‘பொங்கல் - உழவும் மரபும்’ என்ற தலைப்பில் பல்வேறு வகையான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி போட்டியாளர்களிடம் இருந்து மொத்தமாக 6,154 படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன.
அதில் கோலப்போட்டிக்கு 1,682 பேரும், ஓவிய போட்டிக்கு 1,276 பேரும், புகைப்பட போட்டிக்கு 864 பேரும், ரீல்ஸ் போட்டிக்கு 518 பேரும், பாரம்பரிய உடை புகைப்படப் போட்டிக்கு 494 பேரும், மண் பானை அலங்கரித்தல் போட்டிக்கு 490 பேரும், சுயமிப்போட்டிக்கு 830 பேரும் தங்களது படைப்புகளை அனுப்பியிருந்தனர்.
இதிலிருந்து சிறந்த படைப்புகளை அனுப்பிய 36 பேர் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் செய்தித்துறை செயலர் வே.ராஜராம், இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.