புதுச்சேரி: மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் ரேஷனில் அரிசி மக்களுக்கு புதுச்சேரி அரசு தரவேண்டும் என அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுவை மாநில அதிமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா 77வது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி, பிறந்தநாளில் புதுவையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தல், ஏழை எளிய நடுத்தர மக்கள் நலனுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்.
மாநிலம் முழுவதும் கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே அழிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து புதுவை அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை உடனடியாக தகுதியான நிரப்ப துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுவை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில 25 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை, ரேஷன்கடைகள் திறப்பு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெறுவது உட்பட முதல்வர்அறிவிப்புகள், மக்கள் பிரச்சினைகளுக்கு சட்டப்பேரவையில் உரிய தீர்வு காண வேண்டும். அரசின் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அரசு பாகுபாடுடன் செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இலவச அரிசி வழங்கப்படும் என்ற முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்பு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக முதல்வர், பேரவைத்தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஆகியோரின் தொகுதிகளில் மட்டும் இலவச அரிசியை வழங்கிவிட்டு மற்ற தொகுதி மக்களுக்கு இலவச அரிசியை வழங்காமல் அந்த மக்களை ஏக்கத்துடன் ஏமாற்றமடைய செய்துள்ள அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
இலவச அரிசி திட்டத்தை மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்த அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து அத்திட்டத்தை பாகுபாடின்றி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.