தமிழகம்

‘‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு’’: ஆர்எஸ் பாரதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு; பட்ஜெட்டிலும் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது என்று திமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசு, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறது. இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, மும்முனைப் போராட்டம் போல திமுக நடத்தியது.

யுஜிசி வரைவு அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இதனை திமுக தலைவர் வன்மையாக கண்டித்து கடிதம் எழுதியதோடு நிற்காமல், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கடந்த, பிப்ரவரி 6ம் தேதி, தலைநகர் டில்லியில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

பாஜக அல்லாத மாநிலங்கள் ஆளுகின்ற அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் வெற்றியாக அமைந்தது. மாநில அதிகாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்றிய அரசு பறிப்பதை எதிர்த்து கண்டன குரலை அனைத்து தரப்பிலும் எழுப்பத் துவங்கி உள்ளனர்.

மீனவர்களுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படுகின்ற துன்பங்களை களைவதற்கு தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும், நிரந்தர தீர்வு கிடைக்காத காரணத்தினால், இந்தியா கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தின் வெளிப்புறத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மூன்றாம் கட்டமாக, நேற்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 72 கழக மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு எந்தளவுக்கு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை வெளிப்படும் வகையில் அந்த பொதுக்கூட்டங்கள் எடுத்துக்காட்டாக அமைந்தன. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்கும் ஓரவஞ்சனையை, திமுக தலைவர் ஆவடியில் மிகத் தெளிவாக பேசி இருக்கிறார்.

மாதவரத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். எந்த வகையில் தமிழ்நாடு தாழ்ந்து விட்டது? எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டும் தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரிப் பகிர்வில் கூட 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு சார்பில் வழங்குகிறோம். அதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பித் தருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்குகின்றனர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை? ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார். தானும் ஒரு தமிழச்சி என்று சொல்லும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? கொடுக்கும் பணத்தை கூட திருப்பித் தருவதற்கு யோக்கியதை இல்லை. புயல் வெள்ளத்தில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். சேர வேண்டிய நிதி, ஆசிரியர்கள் சம்பளம், 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி என எதையும் தர மறுக்கிறார். தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் அதற்கு காரணம், தமிழ்நாட்டில் புரட்சிகரமான திட்டங்கள் உலகம் போற்றும் அளவில் செயல்படுத்தப்படுவது தான்.

காலை உணவு திட்டத்தை கனடாவில் இருப்பவர்கள்கூட பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டின் பெருமை உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில், தாங்கிக் கொள்ள முடியாமல் மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. எடப்பாடி பழனிசாமி நடிக்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில், மாநில அரசின் அதிகாரத்தை ஆட்சி செய்ய வேண்டிய பணிகளை ஆளுநரே ஆய்வு செய்தார். அப்போது எதிர்கட்சியான திமுக ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. எங்கள் மீது வழக்கு போடப்பட்டது. மாநில உரிமை விசயத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக விட்டுக் கொடுக்காதது என்பதற்கு இது போல பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசுக்கு எதிராக பெயரளவில் ஒரு அறிக்கை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்.

நிதி நெருக்கடியான நிலையிலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் 13 திட்டங்களில், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையில் செயல்படுகிறோம். 41 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். கல்வியில் வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். இதனை தமிழ்நாட்டு மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். இதனை திசை திருப்பும் வகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்தனர். அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது. மதம், இனத்தின் பெயரால் பிரச்சினையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை. தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத், தேஜஸ் ரயில்களை விட்டதாக நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அதுவும் ரயில்களுக்கு பெயர் இந்தியில், ஆனால் மறைந்த கருணாநிதி ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு வந்த ரயில்கள் அனைத்தும் தமிழ் பெயர்களை தாங்கி ஓடின.

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிர்மலா சீதாராமன் கோபப்படுகிறார். இதற்கு மேலும் ஒன்றிய அரசு திருந்தாவிட்டால் திமுக உரிய வகையில் பாடம் புகட்டும்.

ஈரோடு கிழக்கு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்த தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் விவகாரம், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன் வைத்து எதிர்கட்சியினர் பேசினர். அண்ணாமலை சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டார். இருப்பினும், 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இது தான் திமுக தலைவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கிற்கான எடுத்துக்காட்டு.

பியுஷ் கோயல் அறிக்கைக்கு பதில்: ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் சில மாநிலங்கள் தாங்கள் செலுத்திய வரிக்கு ஏற்ப நிதி கேட்பது அற்ப சிந்தனை என சொல்லி இருக்கிறார். அவருக்கு தான் அற்ப சிந்தனை. எங்களிடம் இருந்து சுரண்டிக் கொண்டு செல்லும் நிலையில், நாங்கள் வாய் முடி சும்மா இருக்க வேண்டுமா? நாங்கள் செலுத்தும் வரியில், 50 சதவீதமாவது கொடுக்க வேண்டாமா? மக்கள் எங்களை கேள்வி கேட்க மாட்டார்களா?' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT