தமிழகம்

மகளிர் டி20, கோ-கோ போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக கமாலினி, சுப்பிரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை

செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் டி20, கோ-கோ போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல துணைபுரிந்த தமிழக வீராங்கனை கு.கமாலினி, தமிழக வீரர் வி.சுப்பிரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த கு.கமாலினி இடம்பெற்றிருந்தார். தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரை சதம், 143 ரன்கள், 2 கேட்ச், 4 ஸ்டம்பிங் என்று அவர் அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல, டெல்லியில் முதலாவது கோ-கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றன. இதில் தமிழக வீரர் வி.சுப்பிரமணி அபாரமாக விளையாடி ‘சிறந்த அட்டாக்கர்’ விருதை வென்றார். இறுதி போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, சுப்பிரமணியின் பங்களிப்பால் இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், அவர்களது சாதனைகளை போற்றி பாராட்டும் வகையிலும், மேலும் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி மற்றும் தமிழக கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT