தமிழகம்

தலைநகர் டெல்லியைபோல 2026-ல் தமிழகத்தில் தாமரை மலரும்: தமிழிசை நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தலைநகர் டெல்லியைபோல 2026-ல் தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தலைநகரில் பாஜக தலைநிமிர்கிறது. ஆம் ஆத்மி தலைகுனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் இருந்து நிறைய பாஜக தலைவர்கள் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டனர். வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜக முன்னெடுத்து செல்லும் என்பதற்காக, தலைநகர் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தலைநகரிலே தாமரை மலரும்போது, 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது.

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டினாலே, சிறை சென்றார். தலைநகரில் எந்த ஒரு வளர்ச்சியையும் அவர் தரவில்லை. இண்டியா கூட்டணி ஒரு தேர்தலைகூட ஒற்றுமையாக எதிர்கொள்ளவில்லை. அதனால், காங்கிரஸால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இதை நினைத்து திமுக வருத்தப்பட வேண்டும். அதனால், ஈரோடு தேர்தல் வெற்றியைகூட அவர்களால் கொண்டாட முடியாததாக சூழ்நிலையில் இருக்கின்றனர்.

பட்டியலின மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இஸ்லாமிய மக்கள் வாழும் இடங்களில் கூட 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே, பாஜக, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும், சமூகத்துக்கும் எதிரானவர்கள் என்ற பொய் பிரச்சாரம் இனி எடுபடாது. திருமாவளவன் இன்னும் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இன்னும் பல அதிர்ச்சி அவருக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT