சென்னை: பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச நாளில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்கக் கூடாது என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்துக் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இந்நிலையில், இந்துக்களுக்கு, குறிப்பாக முருக பக்தர்களுக்கு தொடர்ந்து விரோதமாக செயல்படும் திமுக அரசு, பொது விடுமுறை என அறிவிக்கப்பட்ட தைப்பூச தினமான பிப். 11-ம் தேதி பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது.
இந்து சமூக மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் இந்த அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லிம் பண்டிகை தினத்தில் திறக்காத பத்திரப் பதிவு அலுவலகங்களை, இந்து பண்டிகை தினத்தில் மட்டும் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியதாக பெருமை கொள்ளும் தமிழக அரசு, முருகப் பெருமானை போற்றிக் கொண்டாடும் தைப்பூச தினத்தில் பத்திரப் பதிவுஅலுவலகத்தை மட்டும் திறக்கச் சொல்வது இரட்டை நிலைப்பாடாக தெரியவில்லையா?
எனவே, தைப்பூச தினத்தில் தமிழக அரசின் மற்ற அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்துள்ளதைப்போல, பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து, பத்திரப் பதிவுத் துறையில் உள்ள அலுவலர்களும் தைப்பூச விழாவைக் கொண்டாட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.