வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே அதிகாரிகள், கருணை தொகையாக ரூ.50,000 வழங்கினர். இதற்கிடையில், ரேவதியின் கருவில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதால் சிசுவை அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை காலை புறப்பட்டார்.
இந்த ரயில் பகல் 12 மணியளவில் வேலூர் மாவட்டம், காவனூர் - விரிஞ்சிபுரம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த ரேவதியிடம் அதே பெட்டியில் இருந்த ஆண் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். திடீரென ரேவதியின் கையை முறுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவரை, இருப்புப்பாதை பராமரிப்பு பணியில் இருந்த கேங்க்மேன் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் வசித்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இது தொடர்பான தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை செய்த நிலையில், ரேவதிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.
ரூ.50 ஆயிரம் கருணை தொகை: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தள்ளிவிடப்பட்ட ரேவதிக்கு ரூ.50 ஆயிரம் கருணை தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியை சென்னை கோட்ட ரயில்வே முதுநிலை மேலாளர் பரத்குமார், கூடுதல் கோட்ட மேலாளர் பிரதாப் சிங் மற்றும் சந்திரகுமார் உள்ளிட்டோர் இன்று (பிப்.8) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், கருணைத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த 50 ஆயிரத்தை வழங்கினர்.
மகளிர் ஆணைய தலைவி விசாரணை: முன்னதாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் நேற்று இரவு (பிப்.7) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரேவதிக்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். அவரை அனைத்து சிறப்பு மருத்துவர்களும் கவனித்து வருகிறார்கள். அரசு என்ன செய்ய வேண்டுமோ கண்டிப்பாக அதை செய்யும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த வழக்கை ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்ப்போம். தேவைப்பட்டால் நாங்கள் அழுத்தம் கொடுப்போம். அதே சமயம் நிவாரணம் கிடைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மேல் சிகிச்சைக்கு அவசியமில்லை அனைத்து வகையான உயிர் சிகிச்சையும் இங்குள்ள சிறப்பு மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்" என்றனர்.
கருவில் சிசு இறப்பு: ரேவதியின் கருவில் வளர்ந்து வந்த 4 மாத சிசுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, ஸ்கேன் செய்து சிசுவின் நிலையை பரிசோதித்தனர். இன்று (பிப்.8) பகல் 12 மணியளவில் நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் சிசுவின் இதயத்துடிப்பு நின்றதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தையை கருவில் இருந்து பாதுகாப்புடன் அகற்றுவது குறித்து மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மைக் விழிப்புணர்வு: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் பயணத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் 1512 மற்றும் 139 எண்கள் அல்லது 9962500500 அல்லது 9498101957 எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.