பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

அரூர் அருகே மின்சாரம் தாக்கி ஒடிசாவை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

எஸ்.செந்தில்

அரூர்: அரூர் அருகே மின்சாரம் தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர் அவர்களுடன் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பெரியப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கோழிபண்ணை செயல்பட்டு வருகிறது. இதில் ஒடிசா ,சத்தீஸ்கர் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கும் உணவு அருந்துவதற்கும் கோழி பண்ணையிலேயே போதிய வசதியுடன் கூடிய குடியிருப்புகள் அமைந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோழிப் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநிலம் பலன்கீர் மாவட் டம் டங்கர்பாரா கிராமத்தைச் சேர்ந்த அபிராம்காட்டா மகன் உத்தம்காட்டா (24)என்பவரும் அவருடன் பணியாற்றும் ஒடிசா மாநிலம் பலன்கீர் மாவட்டம் சிலாவுன் கிராமத்தை சேர்ந்த தன்சிங்சந்தன் மகன் பவித்திரசந்தன்(24) இருவரும் பெரியபட்டி கோழிப்பண்ணையில் இருந்து சிக்ளூரில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் பெரியபட்டியில் உள்ள கோழிப் பண்ணைக்கு குறுக்கு வழியாக நடந்து வந்தனர்.

அப்போது சிக்ளூர் அருகே விவசாயிகள் சிலர் நெற்பயிர் வயலில் எலிகள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து பயிரை பாதுகாக்க திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து இரவு நேரங்களில் மின்சாரம் பாய்ச்சியிருந்தனர். இதனை அறியாத இருவரும் நடந்து செல்லும் போது மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உத்தம்கட்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பவித்தரசந்தன் என்பவருக்கு முதுகு மற்றும் முகத்தில் லேசான தீக்காயத்துடன் தப்பித்து கோழிப்பண்ணைக்கு சென்று நடந்ததை பற்றி கூறியதும் இறந்து போன உத்தம்காட்டாவின் தந்தை அபிராம்காட்டா (45 ) என்பவர் சம்பவ இடத்துக்கு செல்லும் போது மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பவித்திரசந்தன் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து நில உரிமையாளர்களான காட்டுராஜா என்பவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜி என்பவர் தலைமறைவாக உள்ளார் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT