ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அதிரடி ஆளுமைகளால் வழி நடத்தப்பட்ட காலமும் உண்டு. அவர்களெல்லாம் ஆடி ஓய்ந்துவிட்ட நிலையில், இப்போது பழைய ஆர்ப்பாட்டத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறது அந்த மாவட்ட அதிமுக. அதேபோல், இங்கே ஓரங்கட்டப்பட்டதால் எதிர்முகாமான திமுக-வுக்கு மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இப்போது அங்கே அரசியல் முகவரியை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
1991-96 அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறைக்கு அமைச்சராக இருந்தவர் வ.சத்திய மூர்த்தி. ஜெயலலிதாவிடம் தனித்த செல்வாக்குப் பெற்றிருந்த இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அடுத்து வந்த திமுக ஆட்சி வழக்குப் போட்டது. அதையெல்லாம் தாக்குப்பிடித்து நின்றவர், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் கட்சியை கைக்குள் வைத்திருந்தார்.
ஆனால், இவருக்கு எதிராக கழகத்தினர் செய்த கலகத்தை நம்பி, இவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. இனி இங்கே குப்பைகொட்ட முடியாது என முடிவுக்கு வந்தவர், 2010-ல் அழகிரி ரூட்டைப் பிடித்து திமுக-வில் கலந்தார். 2011 தேர்தலில் இவரை முதுகுளத்தூர் தொகுதியில் நிற்கவைத்தது திமுக. அதில் தோற்றுப் போனார். அதன் பிறகு எந்தத் தேர்தலிலும் சத்தியமூர்த்திக்கு வாய்ப்பளித்து ‘சங்கடத்தை’ ஏற்படுத்தவில்லை திமுக. இப்போது மாவட்ட அவைத் தலைவராக அமரவைத்திருக்கிறார்கள்.
இன்னொருவர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ். 1989-ல் அதிமுக பிளவுபட்டு நின்றபோது பரமக்குடி (தனி) தொகுதியில் ஜெ. அணிக்காக சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர். அதன் பிறகும் தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்ட இவர் இரண்டு முறை வெற்றியும் பெற்றார். இதில், 2011-16-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் வலம் வந்தார்.
2016-ல் சீட் தரவில்லை என்பதற்காக திமுக-வில் இணைந்தார். வந்த இடத்திலும் தனக்கு வாழ்வு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், திமுக இவருக்கு சீட் கொடுக்கவில்லை. இப்போது மாநில தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் பதவியில் திமுக-வில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.
இன்னொருவர் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன். அதிமுக ஆட்சியில் 2001-06 காலகட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். குறுகிய காலத்தில் இரண்டு முறை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட வரலாறு இவருடையது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சாதி ரீதியாக சிந்தித்து டிடிவி தினகரன் பக்கம் போனார். கூடவே இவரது மகன் ஆனந்தும் போனார். ஆனந்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியைத் தந்தார் தினகரன். அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அவரை நிறுத்தினார். லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று தினகரனை தித்திக்க வைத்தார் ஆனந்த்.
இத்தனை செல்வாக்குடன் இருந்த அப்பாவும் பிள்ளையும் தினகரனை விட்டு விலகி 2 வருடங்களுக்கு முன்பு திமுக-வில் இணைந்தார்கள். இப்போது ஆனந்த் மட்டும் விவசாய அணி மாநில பொறுப்பில் இருக்கிறார். நடராஜன் கம்ளீட் ரெஸ்ட்டில் இருக்கிறார். இவர்கள் இருவரும் அமைச்சர் ராஜ கண்ணப்பனை பிடித்து திமுக-வில் இணைந்ததால் இங்குள்ள பரம்பரை திமுக-வினர் இவர்களை பாராமுகமாக வைத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் பட்டியல் போடும் ராமநாதபுரம் அதிமுகவினர், “25 வருசமா மாவட்ட திமுக-வை தங்களோட கண்ணசைவுல வெச்சிருந்த ஆனானப்பட்ட சுப.தங்கவேலன் குடும்பத்தையே திமுக தலைமை, எந்த ஊரு... வந்து பாருன்னு விட்டுருச்சு. அப்படி இருக்கையில இவங்கெல்லாம் எம்மாத்திரம்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.