தமிழகம்

நெல்லையில் இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்!

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அல்வாவை வாங்கி ருசித்து சாப்பிட்டார். மேலும் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் பர்னபாஸ், குழு மண்டல உறுப்பினர் ஜெபராஜ் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் பி. கீதாஜீவன், தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் ஹெமில்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். நெல்லையில் 3 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ: மக்களிடம் கைகொடுத்து மனுக்களை பெற்ற முதல்வர் - வழிநெடுக திரண்டு வரவேற்றதால் உற்சாகம்

திருநெல்வேலியில் 3 கி.மீ. தூரம் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வழிநெடுக திரண்டிருந்த மக்களுடன் கை கொடுத்ததுடன் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சோலார் ஆலைகளை தொடங்கி வைத்தபின் வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மாலை 5.15 மணிக்கு அங்கிருந்து வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் ரவுண்டானா, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை 3 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தினார்.

மாலை 6-30 மணி வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், சிறுபான்மையினர், திமுகவினர், தொழிற்சங்கத்தினர், நிறுவன பணியாளர்கள், கடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கை கொடுத்து மகிழ்ந்தார். ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அளித்தனர். பல பெண்கள் தங்கள் குழந்தைகளை முதல்வரிடம் கொடுத்தனர். அக்குழந்தைகளை வாங்கி முதல்வர் கொஞ்சி மகிழ்ந்தார். பலர் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சிலரது செல்போன்களை முதல்வரே வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்தார்.

ரோடு ஷோ நடைபெற்ற சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. திமுக கொடி தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிறிய மேடை அமைக்கப்பட்டு, திமுக அரசின் சாதனைகளை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பலர் திமுக கொடி வண்ணத்தில் தொப்பி அணிந்திருந்ததுடன் முதல்வரின் உருவபடத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

செங்கோல் பரிசு: வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு செங்கோல் பரிசாக வழங்கினர். வழியிலுள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி முன்பு முதல்வருக்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர், கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்டார். சிலர் தாங்கள் வரைந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஓவியங்களை வழங்கினர். ரோடு ஷோவின் இறுதியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் முதல்வருக்கு புத்தகங்கள், சால்வைகள், பூங்கொத்து கொடுத்தனர்.

பாளை. மகாத்மா காந்தி சந்தையை திறந்து வைத்தார்: பாளையங்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இச்சந்தையில் ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், ரூ.14.92 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள், ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் திருநெல்வேலி டவுண் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், திருநெல்வேலி டவுன் நயினார்குளம் தெற்கு பகுதியை ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.66.04 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, ராபர்ட் புரூஸ் எம்.பி., திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் இரா. ஆவுடையப்பன், மத்திய. மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் ஏ.ஜெ.எம். சாலமோன், பொதுச்செயலர் கே.பெரியபெருமாள், பொருளாளர் டி. இசக்கி, துணை பொதுச்செயலர் ஒய். முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT