தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை நீதிமன்றத்தில் வைத்து மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிஹரன். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்த இருந்த வெடிகுண்டுகளை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றி கொடுத்ததாக, இந்த வழக்கின், 17-வது குற்றவாளியாக போலீஸார் இவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிஹரன் 112 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை காவல்துறை தாக்கல் செய்தது.

விசாரணை நிலுவையில் இருந்த போது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஹரிஹரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என ஹாிஹரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT