தமிழகம்

டெல்லியில் அதிமுக அலுவலகம் 10-ம் தேதி திறப்பு

செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 10-ம் தேதி திறந்துவைக்கிறார்.

அதிமுக கட்சிக்கென ஒரு அலுவலகத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கு தேவையான இடம் கோரி மத்திய அரசிடமும் விண்ணப்பித்திருந்தார். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு மத்திய நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம், அதிமுகவுக்கு, புதுடெல்லியில் உள்ள சாகேத் பகுதியில், எம்.பி. சாலையில் 1,008 சதுர மீட்டர் கொண்ட நிலத்தை ஒதுக்கியது. இதற்காக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.22.46 லட்சத்தையும் அதிமுக செலுத்தி இருந்தது. இந்த இடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில், வரும் 10-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, காணொலி வாயிலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து திறந்து வைக்க உள்ளார். தற்போது அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், மற்ற நிர்வாகிகளும், முன்னாள் எம்.பி.க்களும் டெல்லி புறப்பட்டு சென்று விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்த கட்டிடத்தில் கூட்ட அரங்கம், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரிய படங்கள் கொண்ட காட்சி அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT