காரைக்குடி அருகே காவல் நிலையத்துக்குள் பெண் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரணிதா. இவர் நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, காவல் நிலையத்தில் சீருடையில் இருந்த தன்னை விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்ததாக பிரணிதா புகார் தெரிவித்தார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளரை தாங்கள் தாக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். உண்மை தெரியும்வரை, எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது’ என்றார்.
டிடிவி.தினகரன் கண்டனம்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தன் மகளுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்று கதறி அழும் உதவி ஆய்வாளரின் தாயாருக்கு, காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது? தமிழக காவல் துறையில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பணிமாறுதல்.... சோமநாதபுரம் போலீஸார் கூறும்போது, "சில மாதங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் பிரணிதாவை சிவகங்கைக்கு பணிமாறுதல் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அவரது இடத்தில் வேறு எஸ்.ஐ. நியமிக்கப்பட்டு, அவரும் பணியில் சேர்ந்துவிட்டார். எனினும், பிரணிதா மாறுதலில் செல்ல விருப்பமின்றி, சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.