தமிழகம்

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு - ‘தொழிலாளர் நலன் இல்லை’ என புதுச்சேரி தொழிற்சங்கங்கள் ஆவேசம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தொழிலாளர் நலன் திட்டங்கள் இல்லை என்று கூறி, மத்திய பட்ஜெட் நகலை தொழிற்சங்க நிர்வாகிகள் எரித்தனர். அதை தண்ணீர் ஊற்றி புதுச்சேரி போலீஸார் அனைத்தனர்.

புதுச்சேரி சுதேசி மில் அருகில் இன்று ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, எல்பிஎப், ஏஐசிசிடியூ, எல்எல்எப், எம்எல்எப், என்டிஎல்எப் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர். போராட்டத்தில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளான ஏஐடியூசி மாநில பொதுச் செயலர் சேதுசெல்வம், சிஐடியூ மாநில செயலர் சீனுவாசன், ஐஎன்டியூசி மாநில பொதுச்செயலர் ஞானசேகரன், எல்பிஎப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொழிலாளர் நலன் இல்லை எனக் கூறி மத்திய பட்ஜெட் நகல்களை எரித்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தண்ணீர் தெளித்து அதை அணைத்து நகல்களை மீட்டனர். நிர்வாகிகள் கூறுகையில், ''மத்திய நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர் நலன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் சம்பந்தமாக, அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என்பதை அமைச்சருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை உறுதி செய்துள்ளது.

மேலும், தொழிலாளர் நலன்களை நிதி மூலதனத்துக்கு அடிமையாக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி அளித்து வருகிறது. மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தொழிலாளர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினோம்" என்றனர்.

SCROLL FOR NEXT