மதுரை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற ரூ.1.26 கோடி மோசடி வழக்கில், வங்கி மேலாளர் உட்பட 5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 2007 முதல் 2009 வரை ஜி.பாலசுப்பிரமணியன் தலைமை மேலாளராக இருந்தார்.
இந்த கால கட்டத்தில் தனியார் நிறுவனம் பெயரில் ரூ.80 லட்சம் கடன் அனுமதித்து, பின்னர் அந்த கடனை வராக் கடன் பட்டியலில் சேர்த்து வங்கிக்கு ரூ.1.26 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் வங்கி முதன்மை மேலாளர் ஜி.பாலசுப்பிரமணியன், என்.கல்யாணசுந்தரம், கே.அன்னசரஸ்வதி, டி.மோகன்ராஜ், கே.கீதா உட்பட 8 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் பாலசுப்பிரமணியனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.1.60 லட்சம் அபராதம், கல்யாண சுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும் தலா 1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் அம்மமுத்து, மகாலிங்கம், சுந்தர்ராமன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இதில் சுந்தர்ராமன் விசாரணையின் போது உயிரிழந்தார். அம்மமுத்து, மகாலிங்கம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.