தமிழகம்

ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் அமல்: அரசு தகவல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

அதில், ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்துவதை ஏற்கிறோம். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT