காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டின் அளவை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து சென்னை எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு | 
தமிழகம்

காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும்: அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் முடிவானது காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமின்றி, பாலிசிதாரர்கள், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தெரிவித்தார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை 100 சதவீதம் உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காப்பீட்டு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, சென்னை அண்ணா சாலை எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரூ.55 லட்சம் கோடி: அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், ``மத்திய அரசின் முடிவானது காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமின்றி, பாலிசிதாரர்கள், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். அதாவது, பாலிசிதாரர்களின் சேமிப்பு பணம் தங்குதடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லும். அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

எல்ஐசி-க்கு பிரிமீயம் வருவாயாக வந்துள்ள ரூ.55 லட்சம் கோடியை இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடு செய்துள்ளோம். மக்களின் பணத்தைத் திரட்டி நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மாறாக, வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது. அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் புரிந்துகொண்டு ஒன்றிய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்'' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT