வடலூர் சத்தியஞான சபையில் பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்ட மரங்கள். 
தமிழகம்

வடலூர் வள்ளலார் மைய சத்தியஞான சபையில் மரங்கள் அகற்றம்: சன்மார்க்க அன்பர்கள் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் திடீரென மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு சன்மார்க்க அன்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கு வரும் 11-ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடுவர். இதற்கான முன்னேற்பாடுளை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தெய்வநிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சத்தியஞான சபை பெருவெளியைச் சுற்றிலும் பக்தர்கள் இளைப்பாற 100-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கடந்த 2 நாட்களாக தெய்வநிலைய நிர்வாகத்தினர் வெட்டி அகற்றி வருகின்றனர். இதற்கு சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம் என்ற பெயரில் பச்சை மரங்களை வெட்டுவது வேதனையளிப்பதாக சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்புமணி கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில், இதுவரை மரங்களை வெட்டியதில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும் மரங்களை வெட்ட வேண்டிய தேவை என்ன? தைப்பூச நாளில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பக்தர்கள் கூடினாலும், அனைவரும் எந்த இடையூறும் இல்லாமல் ஜோதி தரிசனம் காண வசதியாகத்தான் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருவெளி அமைந்துள்ளது. இங்கு எந்த ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்று வள்ளலாரே கூறியுள்ளார். ஆனால், வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக பெருவெளியை ஆக்கிரமித்துவிட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி மரங்களை அகற்றுவது முரண்பாடாகும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக கூறிய வள்ளலார் நிலத்தில் மரங்களை வெட்டுவது ஏற்கத்தக்கதல்ல. வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால், உடனடியாக மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும். அங்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT