தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திருநெல்வேலிக்கு நாளை வருகிறார். அவர் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையை திறந்துவைக்கிறார்.
பல்வேறு மாவட்டங்களில் களஆய்வுப் பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மொத்தம் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, கங்கைகொண்டானில் ரூ.4,400 கோடியில் கட்டப்பட்டுள்ள டாடா சோலார் தொழிற்சாலையை நாளை பிற்பகல் திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 40 ஆயிரம் பேருக்கு பட்டாக்களையும், 20,200 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். இதற்காக பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு அவற்றை ஆய்வு செய்தார். ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மு.அப்துல்வகாப் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் திமுக நிர்வாகிகளை முதல்வர் நாளை சந்தித்துப் பேசவுள்ளார். நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரம் பேர், திமுகவில் இணைகிறார்கள். வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் மீனவர்களையும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிகிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நாளை நெல்லைக்கு காரில் வரும் முதல்வருக்கு கேடிசி நகர் பாலத்திலும், கங்கைகொண்டான் செல்லும் வழியில் நாரணம்மாள்புரத்திலும், பாளையங்கோட்டை மார்க்கெட் திறப்பு விழாவுக்கு செல்லும் வழியிலும் வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.