சித்ரா 
தமிழகம்

தூங்கா நகரை தூய்மை நகராக மாற்றுவாரா? - மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையருக்கான சவால்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள சித்ராவுக்கு அன்றாட பணிகளை தாண்டி பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. மதுரை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்ற சித்ராவுக்கு அமைச்சர்கள், மேயர், திமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல அலுவலக அதிகாரிகள்-கவுன்சிலர்களிடையே நீடிக்கும் பனிப்போர், மண்டலத் தலைவர்களின் அரசியல் ஆகியவற்றை தாண்டி, மாநகராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பணிகள் சவால்களாக நிற்கின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தூய்மை பாரதம் திட்டத்தில் மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது மதுரை மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. தூங்கா நகரான மதுரையை தூய்மையான நகரமாக மாற்றும் திட்டத்தை இதுவரை வந்த எந்த ஆணையர்களாலும் சாதிக்க முடியவில்லை. கடந்த காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் காலை 6-11 மணி, பிற்பகல் 2-5 மணி வரை பணிபுரிந்தனர். ஆனால், தற்போது காலை 7 மணிக்குதான் பணிக்கு வருகின்றனர். பிற்பகலில் வருவதில்லை.

மாநகர் பகுதியில் காலை 7 மணிக்கு குப்பை அகற்றுவது, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கடினமானதாக உள்ளது. இதற்கு போதுமான வாகனங்களும் இல்லை. தூய்மைப் பணியாளர்களாக உள்ளவர்களில் பெரும்பாலா னவர்கள் வயதானவர்களாகவும், பெண்களாகவும் இருப்பது குப்பை சேகரிப்பு பணியில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதலாக புதிய இளம் பணியாளர்களை தேர்வு செய்து, அதிகாலை 6 மணிக்கு தூய்மைப் பணியை தொடங்கினால் மட்டுமே மதுரையை தூய்மை நகராக மாற்ற முடியும். நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப் படாமல் முதலுதவி சிகிச்சை மையங்கள் போலவே செயல்படுகின்றன.

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டிட வசதியிருந்தும் போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, சிறப்பு திட்டங்கள் இல்லாததால் கடந்த காலத்தை ஒப்பிடும்போது மருத்துவம், பொறியியல் செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வரி வசூலில் மதுரை மாநகராட்சி 3-ம் இடத்தில் இருந்தாலும், பழைய 72 வார்டுகளில் இன்னும் பல ஆயிரம் வணிகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்துவரியையே செலுத்துகிறார்கள். குறிப்பாக மாசி வீதிகள், வெளி வீதிகளில் 90 சதவீத கட்டிடங்கள் வணிக கட்டிடங்களாக மாறிவிட்டன. ஆனால், அவர்கள் தற்போதும் குடியிருப்புக்கான சொத்துவரியே செலுத்துகின்றனர். இவர்களுக்கு சாதகமாக அலுவலர்கள் செயல்படுகின்றனர்.

சொத்து வரி விவகாரத்தில் முன்னாள் ஆணையரின் கண்டிப்பான நடவடிக்கையை புதிய ஆணையர் தொடர வேண்டும். வணிக கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பெண் மண்டல தலைவர்கள் உள்ள அலுவலகங்களில் ஒரு அலுவலகத்தை தவிர மற்ற அலுவலகங்களில் அவர்களது கணவர்களே நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதாக புகார் உள்ளது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

முதல் பெண் ஆணையர்: மதுரை மாநகராட்சி முதல் பெண் ஆணையராக சித்ரா பொறுப்பேற்றார். ஆணையராக இருந்த தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு பதிலாக மின் ஆளுமை துறை இணை இயக்குநராக பணியாற்றிய சித்ரா, மதுரை மாநகராட்சியின் 71-வது ஆணையராக நியமிக்கப்பட்டார்.

மாநகராட்சியின் 54 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் பெண் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT