தமிழகம்

ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு: ரூ.50,000 அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி, ரூ.50,000 அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT