தமிழகம்

பழநியில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜக.வினர் 100 பேர் கைது

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநியில் இருந்து 'குன்றம் காக்க, குமரனைக் காக்க' என்ற கோரிக்கையை முன் வைத்து, காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பாஜக.வினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.4) இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்பினர் அறப்போராட்டத்துக்கு அழைப்பை விடுத்தனர்.

இதன்படி, ‘குன்றம் காக்க, குமரனை காக்க’ என்ற கோரிக்கையுடன் 3-ம் படையில் இருந்து முதல் படையை நோக்கி, இன்று செவ்வாய்கிழமை (பிப்.4) காலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆன்மிகப் பிரிவு மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் காவடிகளுடன் பாதயாத்திரை புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, மதுரையில் 144 தடை உத்தரவு உள்ளதால் வெளி நகர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.

தடையை மீறி செல்ல முயன்றால் கைது செய்யப்படும் என்று கூறினர். அதனை மீறி, திருப்பரங்குன்றம் புறப்பட்ட 10 பெண்கள் உட்பட பாஜக.வினர் 100 பேரை, பழநி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT