ஊழல்களைச் சொன்னதற்காக காவல்துறை ஏடிஜிபியையே கொலை செய்ய முயற்சி நடந்துள்ள நிலையில், மக்கள் எப்படி தங்களது குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? என அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னைக் கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்’ என்ற அவரின் கூற்று நெஞ்சை பதறச் செய்கிறது.
ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள். இத்தகைய ஆட்சியில் மக்கள் எப்படி தங்களது குறைகளை தைரியமாகச் சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது காவல்துறை மேல் விழுந்த பெரும் கரும்புள்ளி. இதற்கு திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் சுட்டிக்காட்டியதற்கு பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மவுனமாக்கவே பயன்படுத்தப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஒரு ஏடிஜிபியே கூறியிருப்பது ஐயத்தை அதிகரிக்கிறது. இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். படுகொலை செய்ய சதி நடந்ததாக ஏடிஜிபி கூறியது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், ஏடிஜிபியை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவ்விவகாரத்தில் நடுநிலையோடு விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்துக்கு சென்றிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.