தமிழகம்

யுஜிசி நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பிப்.6-ல் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. மத்திய கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் வரும் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பங்கேற்க வேண்டும்’ என்று திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி. எழிலரசன் எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம்: இதற்கிடையே, பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 8-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஓரவஞ்சனையான நிதி பகிர்வு, தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, முதல்வரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பிறகும், ஒருங்கிணைந்த கல்வி திட்டம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரைக்கூட உச்சரிக்காதது என பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசை கண்டித்து பிப்ரவரி 8-ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்’ என்று திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT