மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மலையை பாதுகாக்கக் கோரி தடையை மீறி இன்று நடக்கும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் பங்கேற்பதோடு, மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்களை திரண்டு வருமாறு அழைப்பு விடுத்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். போராட்டத்தை தடுக்க பலரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக்கோரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தடை விதிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க, முன்னாள் காவல் அதிகாரியே அழைப்பு விடுத்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பொன் மாணிக்க வேல் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருக்கக் கூடிய சைவ, வைணவ அடியார்கள், இந்துக்கள் எல்லோரும் திருப்பரங்குன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது, அதன் விளைவு என்ன என்பதை அறிவர். இந்த நிகழ்வால் சமய நல்உணர்வுக்கும், சகோதர தத்துவத்துக்கும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடிய காரணங்கள் உள்ளன. இப்படிப்பட்ட விரும்பத்தகாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எள்ளளவும் நடக்கக்கூடாது என்பதற்கு வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அந்த நோக்கில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பிப்.4-ம் தேதி (இன்று) திருப்பரங்குன்றத்தில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
ஜனநாயக ரீதியாக சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர். வேறு வேலை இருக்கிறது என்று நாம் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைவரும் வர வேண்டும். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அரைநாள் ஒதுக்கிவிட்டு வர வேண்டும்.
குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைவரும் வந்து இந்த முக்கியமான தருணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘திருப்பரங்குன்றம் மலை விஷயத்தில் அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைப் பார்த்து, ஆதங்கத்தில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்ததோடு பக்தர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு ஆன்மிகத்தின் மீது மிகுந்த ஈடுபாடும், பக்தியும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே எங்கள் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தந்துள்ளார்’’ என்றார்.