பிரதிநிதித்துவப்படம் 
தமிழகம்

‘புதுச்சேரியில் மின்கட்டண கொள்ளை’ - பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மின்கட்டணத்தில் புதுச்சேரி மின்துறை மக்களிடம் கொள்ளையடிக்கிறது. மக்களை ஒன்றிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுவை முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கூறியது: “புதுவை மாநிலத்தில் சராசரியாக யூனிட்டுக்கு ரூ.7 முதல் ரூ.9 வரை மின் கட்டணம் வசூலித்து மக்களிடம் கொள்ளையடிக்கும் துறையாக மின்சாரத் துறை உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பல்வேறு தலைப்புகளில் புதுவை போல கட்டணம் வசூலிப்பது இல்லை. மின் கட்டணம் என்ற பெயரில் ஏழை, எளிய நடுத்தர மக்களை அரசு ஏமாற்றி வருகிறது. புதுவையை ஆண்ட காங்கிரசும், தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் அரசும் மக்களுக்கு எதிரான அரசாக உள்ளது. இளைஞர்கள் தலைமையேற்று புதிய அரசை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

அரசின் மின்கட்டண கொள்ளையை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்கள் தங்கள் கண்டன குரலை எழுப்ப வேண்டும். புதுவை மாநிலத்தை காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாநிலம் மக்கள் வாழ தகுதியற்றதாகிவிடும்.

பதவி மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும். மாதம் ரூ.500 அரிசி கொடுத்துவிட்டு, மின் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி என பல ஆயிரத்தை அரசு மறைமுகமாக வசூலிப்பதை கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT