மதுரை: "பாஜகவின் எந்தவித ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கும் காவல் துறையினர் அனுமதி அளிப்பது இல்லை" என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
மதுரை திருப்பரங்குன்ற முருகன் கோயிலில் தைப்பூச மாத விழா நடைபெறும் நிலையில், காவல் துறையினர் பக்தர்கள் செல்வதைத் தடுக்கும் விதத்தில் செயல்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் காவல் துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி பக்தர்கள் தடையும் இன்றி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முப்பாட்டன் முருக பக்தர்கள் குழு சார்பில், மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், மாநகர காவல் துறை ஆணையரிடமும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் மனு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆர்.சீனிவாசன் கூறுகையில், ‘திமுக ஆட்சி தொடங்கிய நாள் முதல் இந்து அமைப்புகள், பாஜக சார்பில், நடக்கும் எந்தவித ஆர்ப்பாட்டத்துக்கும் காவல் துறையினர் அனுமதி அளிப்பது கிடையாது. திருப்பரங்குன்றத்தில் காவல் துறையின் கட்டுப்பாடு காரணமாகப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறதா அல்லது ஆங்கிலேயர், அவுரங்கசீப் ஆட்சி நடைபெறுகிறதா என்ற அளவுக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை உள்ளது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பாஜகவின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் எப்போதும் அனுமதி கிடைப்பதே இல்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 144 தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடைசி ஜனநாயகமான நீதிமன்ற தீர்ப்பை நம்புகிறோம். திமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படியான நீதி கிடைக்காத பட்சத்தில் தேர்தலில் திமுகவுக்குகு மக்கள் பாடம் புகட்டுவர். நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து அதற்குக் கட்டுப்பட்டு எங்களது செயல்பாடு இருக்கும்” என்று அவர் கூறினார்.