தமிழகம்

மத்திய அரசின் பட்ஜெட் மாநிலங்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்கும்: திருமாவளவன், சீமான் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாகுபாடுகளை உருவாக்கும் என திருமாவளவன், சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விசிக தலைவர் திருமாவளவன்: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட், கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பிகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனம், மக்கானா பயிரை மேம்படுத்த வாரியம், கிரீன் ஃபீல்ட் விமான நிலைய, பாட்னாவில் ஐஐடி விரிவு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்துக்கு ஒரு அறிவிப்புக்கூட இல்லை. பாஜகவின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது அப்பட்டமான ஓரவஞ்சனையாகும். அதேபோல் அணுசக்தி துறை, விவசாயத் துறை, சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறைகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் எஸ்சி, எஸ்டி மக்களின் தொகைக்கேற்ப ஒதுக்க வேண்டிய தொகையில் பாதியைக் கூட ஒதுக்காமல் வஞ்சித்துள்ளனர்.

இந்த அணுகுமுறை சமூக ரீதியில் ஏற்றத்தாழ்வை வலுப்படுத்தி மாநில உரிமைகளை மறுப்பதாக இருக்கிறது. மக்களுக்கிடையேயும் மாநிலங்களுக்கிடையேயும் பாகுபாடுகளை உருவாக்கும். பிரிவினைவாதப் போக்கை ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பெரும்பாலும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் நகலை போல, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டும் அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்காக இல்லாமல், பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான தந்திர அறிக்கையாக அமைந்திருக்கிறது.

பொருளாதாரச் சவால்கள் நிறைந்த எதிர்காலத்துக்கான எந்த பயனுள்ள அறிவிப்பும் இல்லாத இந்த பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து இருப்பதன் மூலம் இதை, காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பையாகவே கருதுகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT