சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியாக, பூந்தமல்லி - போரூர் இடையே உயர்மட்டப்பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும். அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகியவை ஆகும். இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன.
இத்தடத்தில் இடம்பெறும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம், 4-வது, 5-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை இணைக்கும் இரட்டை அடுக்கு மேம்பாலம் ஆகியவை பொறியியல் அதிசயமாக திகழும் என்பதால் இப்பாதை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணி ஆகியவை முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுதவிர, ரயில் நிலைய கட்டுமானப்பணிகளும் இறுதி நிலையில் உள்ளது.
இந்நிலையில், அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் பாதையை வரும் டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரயில் தண்டவாளப்பணி, கட்டுமானப்பணி, மின் இணைப்பு பணி உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி வரும் மார்ச்சில் முடிவடையும். வரும் ஏப்ரலில் மெட்ரோ ரயிலை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு உள்ளோம்.
ஒருபுறம் மெட்ரோ ரயில் இயக்கி சோதனையும், மறுபுறம் மேற்கூரை அமைத்தல் பணி, இறுதிகட்ட பணிகளும் நடைபெறும். பூந்தமல்லி - போரூர் வரை உயர்மட்டப்பாதையில் ஜூன் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிடுவோம்.
தற்போது, ஒரு மெட்ரோ ரயிலை பூந்தமல்லி பணிமனையில் இயக்கி சோதிக்கிறோம். இந்த தண்டவாளம் தயாரான பிறகு, பூந்தமல்லி - போரூர் பாதையில் ரயிலை இயக்கி சோதிக்கப்படும். 4 மாதங்கள் ரயில் இயக்கி சோதிக்கப்படும்.
இரண்டாவது மெட்ரோ ரயில் இந்த மாத இறுதியில் சென்னைக்கு வந்துவிடும். இப்பாதையை ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
இதற்கடுத்து போரூர் - பவர்ஹவுஸ் வரையிலான உயர்மட்டப்பாதை பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலும், பவர்ஹவுஸ் - தி.நகர் பனகல்பார்க் பாதை பணிகளை 2027-ம் ஆண்டு மார்ச்சிலும் முடித்து பயன்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.