தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் திறந்து வைத்தார். கடந்த 1967, 1977-ஐ போல் 2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம் என தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் 2-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தவெகவின் கொள்கை தலைவர்களான வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
வாகை மலரின் பின்னணியில் 3 அடி பீடம், ஒன்றரை அடி உயரத்தில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலையின் பீடத்திலும் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில், அந்தந்த தலைவர்கள் வாழ்ந்த காலக்கட்டங்களில், அவர்கள் நாட்டுக்காகவும், தமிழ் சமூகத்துக்காகவும் செய்த போராட்டம், தியாகங்கள், அவர்களின் இலக்கு என்ன என்பது இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், 2-ம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைத்திருப்பதையொட்டி, கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, 2-ம் ஆண்டின் வாயிலில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நமது அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். மாநாட்டில் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம்.
அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சினைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது, மக்களரசியல் மட்டுமே.
வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி. 1967-ல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒரு பெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977-ல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே, இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.
அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நவீன வசதிகளுடன் கூடிய சக்கர நாற்காலியை விஜய் வழங்கினார். தொடர்ந்து, 5-ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் விருந்து வழங்கப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.