ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில். பன்னீர் செல்வம் பூங்கா அருகேயுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வரும் கிறிஸ்தவ மக்களிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதைக் கண்டிக்கும் வகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். சீமான் காவி உடை அணிந்து இருப்பதுபோன்ற படம் அந்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றிருந்ததால், நாதகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், நாதக – தபெதிக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரையும் எச்சரித்தனர். தொடர்ந்து, பெரியாரைக் கண்டித்து நாதகவினர் முழக்கங்களை எழுப்பியபடியே பேரணியாகச் சென்றனர். பெரியார் குறித்து அவதூறு பரப்பி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் தமிழர் கட்சியினர் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என தபெதிக நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.