மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ரூ.13,415 கோடி நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார்.
இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள, அவரது சொந்த ஊரான மேலகாட்டுவிலையில் இன்று ஊர் மக்கள் பாராட்டு விழா நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப்-15 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் அனுப்பப்பட்ட வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது நாட்டுக்கே பெருமையான நிகழ்வு. இஸ்ரோவில் பணிபுரியும் அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
பாமர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ரூ.13,415 கோடி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.