கோவை: ஞாயிற்றுகிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு உத்தரவிட்ட நிலையிலும் கோவை மாவட்டத்தில் உள்ள 17 அலுவலகங்கள் இன்று செயல்படவில்லை.
மங்களகரமான நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பணிச்சுமை காரணமாக ஞாயிறு பணியை புறக்கணிக்க போவதாக பத்திரப்பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அலுவலர்கள் பணியை புறக்கணித்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 17 பத்திரப்பதிவு அலுவலகங்களும் இன்று செயல்படவில்லை. அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியாததால் நேற்று அலுவலகங்கள் மூடப்பட்ட சம்பவம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: ஏற்கெனவே வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு அதிக பணிச்சுமை நிலவுகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் பெற்று தரும் பல பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை என்ற நிலையில் மங்களகரமான நாள் என்ற காரணத்தை கூறி பணியாற்ற கூறுவது ஏற்புடையதல்ல. எங்களுக்கு ஓய்வு தேவையில்லையா.
பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோர் சுபகாரிய நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாமா. அவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா. எனவே அரசு அறிவித்த போதும் ஞாயிற்றுக்கிழமை பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரிய பாதிப்பு இல்லை: ஞாயிற்றுகிழமை பத்திரப்பதிவு அலுவுலகங்கள் செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு மக்களுக்கு சென்றடையாததால் அலுவலகங்கள் செயல்படாத நிலையிலும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. பத்திரப்பதிவு செய்ய ஆவணங்கள் தயார் செய்தல், டோக்கன் பெறுதல் போன்ற நடைமுறைகள் உள்ள காரணத்தால் அரசு திடீரென அறிவித்தாலும் அதற்கேப பத்திரப்பதிவு பணி அன்றைய தினத்தில் நடப்பதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளதாக பத்திரப்பதிவு எழுத்தர்கள் தெரிவித்தனர்.