சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதால், ஊகத்தின் அடிப்படையில் இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில் இறுதி முடிவு காணும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரி்த்த உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பான சூரியமூர்த்தியின் மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து, உரிய முடிவு எடுக்குமாறும், ஓபிஎஸ், இபிஎஸ் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டிச. 4-ம் தேதி உத்தரவி்ட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
அப்போது அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது எனக் கூறி, ஓ.பி.ரவீந்திரநாத், வா.புகழேந்தி, பி. ராம்குமார் ஆதித்தன், பி.காந்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், கே.சி.பழனிசாமி, சூரியமூர்த்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக்கூடாது என தடை விதிக்கக் கோரி இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 6 புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கும் வகையில், அது தொடர்பாக பதிலளிக்க சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், அந்தப் புகார்களும் சேர்த்து விசாரிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சட்டத்துக்குட்பட்டு, மிகவும் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு வருகிறது.
சுதந்திரமான, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற அரசியல் கட்சியினருக்கிடையே நிகழும் உட்கட்சிப் பிரச்னைகள், சின்னங்கள் ஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தலையிட்டு தீர்வுகாண நீதித்துறைக்கு இணையான முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கை தொடர்ந்துள்ள பழனிசாமி வழக்கின் முழு பின்னணி விவரங்களையும் தனது மனுவில் தெரிவிக்காமல், ஊகத்தின் அடிப்படையில் மனுவை தாக்கல் செய்து தடை உத்தரவும் பெற்றுள்ளார். எனவே, பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தடையை நீக்கி, அந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் பிப்.6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.