தமிழகம்

நிதி நிறுவன கடனை செலுத்தாததால் வீடு ஜப்தி: போலீஸார் முன்னிலையில் விஷமருந்திய லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: வல்லநாடு அருகே வீட்டை ஜப்தி செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீஸார் முன்னிலையில் கணவரும், மனைவியும் விஷம் குடித்தனர். இதில் லாரி ஓட்டுநரான கணவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கரன் (45). இவரது மனைவி பத்ரகாளி(43). இவர்கள், தங்களுக்கு சொந்தமான வீட்டை 2020-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்காக மாதம் ரூ.11 ஆயிரம் தவணை கட்டி வந்தனர். ஆனால், பல மாதங்களாக சங்கரன் தவணைத்தொகை செலுத்தாததால், தனியார் நிதி நிறுவனத்தினர் பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் நிதி நிறுவனத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். தவணைத்தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி டிஎஸ்பி சுகிர் முன்னிலையில், முறப்பநாடு போலீஸார், நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேற்று காலை சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். ஜப்தி செய்ய வந்தவர்கள் சங்கரன் வீட்டில் இருந்த அவரையும், அவரது மனைவி பத்ரகாளியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும், வீட்டிலிருந்த பொருட்களை, நிதி நிறுவன ஊழியர்கள் வெளியே எடுத்து வைத்தனர்.

அப்போது, பத்ரகாளி பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதைப் பார்த்த போலீஸார் அதை தட்டிவிட்டனர். கீழே விழுந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்த சங்கரன், மீதமிருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளார்.

வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்த இருவரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இருவரும் நடிப்பதாகக் கூறி பாராமுகமாக இருந்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் அங்கேயே கிடந்துள்ளனர்.

இதற்கிடையே, வீட்டை ஜப்தி செய்த நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், சங்கரன் மற்றும் பத்ரகாளியின் நிலை மோசமானதால், இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்ரகாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முறப்பநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன் - பத்ரகாளி தம்பதிக்கு 12-ம் வகுப்பு படிக்கும் பானு (18), 10-ம் வகுப்பு படிக்கும் கல்யாணி (16) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT