திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் பாரதியார் நினைவு இல்லம் எதிரே கழிவுநீர் குழாய் உடைந்ததால் அந்த வழியே பார்த்தசாரதி கோயிலுக்கு செல்வோரும், அப்பகுதியில் வசிப்போரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தனர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்தபோது அங்குள்ள பாரதியார் நினைவு இல்லம் எதிரே சாலையில் 8 அடி ஆழத்தில் செல்லும் கழிவுநீர் குழாய் உடைந்திருப்பது தெரியவந்தது. பொக்லைன் தோண்டி பார்த்தபோது 6 அடி நீளத்துக்கு கழிவுநீர் குழாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறுவது கண்டறிப்பட்டது.
இதனிடையே, கழிவுநீர் மாற்றுப் பாதையில் வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கழிவுநீர் வெளியேறி துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதால் பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே, கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “கழிவுநீர் தேங்கி வெளியேறியது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றதால் உடனடியாக சீரமைப்புபணியை மேற்கொள்ள முடியவில்லை. அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் விழா முடிந்த பிறகே கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, பாரதியார் நினைவு இல்லம் எதிரே கழிவுநீர் குழாயில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் புதன்கிழமைக்குள் இப்பணி முடிவடையும்” என்று தெரிவித்தனர்.