கிளாம்பாக்கம் பேருந்து முனைய வாகன வளாகத்தில் பயணிகள் பாதுகாப்புக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, முனையத்தின் வாகன நிறுத்துமிடம், நடைமேடைகள், முதல் தளம், பிரதான கட்டிடம், மாநகர போக்குவரத்து கழக பகுதி என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பிரத்தியேகமான கண்காணிப்பு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிரதான கட்டிடத்தின் மத்தியில் பயணிகளுக்காக 24 மணி நேர உதவி மையமும் செயல்பட்டு வருகிறது. பேருந்து முனையம் மட்டுமல்லாது, பேருந்து முனையம் தொடர்பாக எங்கிருந்து அழைத்து புகார் அளித்தாலும் அதை முதலில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பேருந்து முனையத்தின் ஒவ்வொரு இடத்திலும் போதிய பாதுகாப்பு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். அங்கு பிரத்தியேகமாக ஒரு காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் வசதிக்காக கேசிபிடி (KCBT) என்ற கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், “சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வாகன வளாகம்” என ஜன.28-ம் தேதியிட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வந்திருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அங்கு சமூக விரோத செயல்களோ, மது அருந்துவதோ, சீட்டு விளையாடுவதோ, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற எவ்வித நிகழ்வுகளும் சமீப காலங்களில் நடந்ததாக புகார் ஏதும் கிளம்பாக்கம் காவல் நிலையத்திலோ, உதவி மையங்களிலோ பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.