தமிழகம்

8 கல்லூரிகளில் டீன் பதவியில் உதவி பேராசிரியர்கள்: ஏஐசிடிஇ விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 உறுப்பு கல்லூரிகளில் ஏஐசிடிஇ விதிமுறைகளை மீறி டீன் பதவியில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. இவ்வாறு மாநிலம் முழுவதும் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இவைதவிர அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளாக கிண்டி பொறியியல் கல்லூரி, கிண்டி அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி , குரோம்பேட்டை எம்ஐடி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் கல்லூரி ஆகியவையும் இயங்கி வருகின்றன. மேலும், திண்டிவனம், அரியலூர், கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 16 இடங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

ஒட்டுமொத்த கல்லூரி நிர்வாகமும் டீன் (முதல்வர்) தலைமையில் செயல்படும். உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், முதல்வர் என ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட கல்வித்தகுதியை அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நிர்ணயித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்கும்போது, ஏஐசிடிஇ விதிமுறையின்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதை எல்லாம் ஆய்வு செய்யும்.

இந்நிலையில், விதிமுறையை தானே மீறும் வகையில் திண்டிவனம், அரியலூர், பண்ருட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருக்குவளை, பட்டுக்கோட்டை ஆகிய 8 இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் டீன் பதவியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ் இணை பேராசிரியர், பேராசிரியர் நிலையில் இருப்பவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ‘‘தனது உறுப்பு கல்லூரிகளிலேயே ஏஐசிடிஇ விதிமுறைகளை மீறி, உதவி பேராசிரியர்களை டீன்களை நியமித்துவிட்டு, தனியார் கல்லூரிகளில் மட்டும் அந்த விதிமுறைகளின்படி உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை ஆய்வுசெய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எந்த தார்மீக உரிமை உள்ளது? என என்று தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் கேட்கமாட்டார்களா’’ என்று மூத்த பேராசிரியர்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.

பல்கலை. பதிவாளர் பதில்: இதற்கிடையே, உறுப்புக் கல்லூரி டீன்கள் நியமனம் குறித்து அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெ.பிரகாஷிடம் கேட்டபோது, "அந்த 8 உறுப்பு கல்லூரிகளில் டீன்களாக உதவி பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை சரிபார்த்துதான் உறுதிப்படுத்த முடியும். எனினும் டீன் நியமனத்தில் விரைவில் புதிய மாற்றங்களைச் செய்ய உள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT