தமிழகம்

தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்: நீதிமன்றம் சொல்வது என்ன?

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் ஏப். 28-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதை தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தரக் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், தனியார் நிலங்களில் கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு தமது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28-ம் தேதிக்கு முன்பு அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT